Share

Sep 18, 2008

குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (15)- சாரு நிவேதிதா

குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (15)


"Open my grave when I am dead, and thou shalt see a cloud of smoke rising out from it; then shalt thou know that the fire still burns in my dead heart -- yea, it has set my very winding-sheet alight."
ஹஃபீஸின் இந்த கஸலில் " yea, it has set my very winding-sheet alight" என்ற வாக்கியத்திற்கு பெருமாளுக்கு அர்த்தம் விளங்கவில்லை. winding-sheet என்றால் சவத்தின் மீது போர்த்தப் படும் போர்வை என்று புரிந்தாலும் அர்த்தம் பூரணமாகவில்லை. தமிழின் பிரபலமான மொழி பெயர்ப்பாளர்கள் என்றால் "அந்த நெருப்பில் என் போர்வை கருகாது" என்று கொலை செய்து இருப்பார்கள். ராஜநாயஹத்தை போனில் அழைத்தான் பெருமாள். அவர் , இவன் முடிக்கும் முன்பே "நானே அழைக்கிறேன்" என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார். பொதுவாக அவனுடைய நண்பர்கள் அனைவருமே அவனுக்குச் செய்யும் உதவி அது. அவனுடைய தொலைபேசி செலவைக் குறைக்கிறார்களாம். பெருமாளுக்கோ அவருக்கு செலவு வைக்கக் கூடாது என்று எண்ணம். அதனால் அவர் அழைப்பை இவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அழைக்கும்போது எடுக்காமல் , மணி அடித்து ஓய்ந்ததும் இவன் அழைப்பான். அவர் எடுக்க மாட்டார். அவரும் இவனைப் போலவே நினைத்திருக்கிறார். சொன்னால் யாருமே நம்ப மாட்டீர்கள். சரியாக மூன்று மணி நேரம் நடந்தது இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம். ஒரு கட்டத்தில் பெருமாளுக்கும் பிடிவாதம் வந்து விட்டது. ' இவரோடு இன்று நாம்தான் பேச வேண்டும் ' என்று தீர்மானம் செய்து விட்டான். அவருக்கோ அப்படியெல்லாம் எதுவும் தீர்மானமோ பிடிவாதமோ எதுவும் இல்லை. பெருமாளின் தொலைபேசியில் சிக்னல் இல்லை என்று நினைத்துக் கொண்டு , விடாமல் பொறுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தார். முப்பது , நாற்பது அழைப்புகள் இரண்டு பக்கத்திலிருந்தும். நேரம் செல்லச் செல்ல பெருமாளுக்கு ஒரு வீம்பே வந்து விட்டது.
இதற்கிடையில் ஒரே ஒரு முறை பெருமாளிடம் சிக்கினார் ராஜநாயஹம். "என்ன ராஜநாயஹம்...இப்படி ஆகிக் கொண்டிருக்கிறது ?" என்று ஆரம்பித்தான் பெருமாள். அவர் அதற்குள் குறுக்கிட்டு "நானே கூப்பிடுகிறேன் பெருமாள்" என்றார்.
" ராஜநாயஹம்...ராஜநாயஹம்...ப்ளீஸ்...கேளுங்கள்...எனக்கு ஒரே ஒரு வார்த்தைக்குத்தான் அர்த்தம் தெரிய வேண்டும். ஒரே ஒரு வார்த்தை...நீங்கள் கூப்பிட வேண்டாம்.
போனை வைத்து விடாதீர்கள்" என்று கதறி விட்டு கவிதையின் முதல் வரியிலிருந்து ஆரம்பித்தான். அப்போதுதானே முழுமையாகப் புரியும் ? ஆனால் அவரோ "சரி சொல்லுங்கள் , எழுதிக் கொள்கிறேன்" என்றார்.
" அடடா , ஒரே ஒரு வார்த்தைக்காக முழுக் கவிதையையும் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே ராஜநாயஹம் ?"
" இருங்கள் பெருமாள். நான் ஆபீஸ் போய் விடுகிறேன். அங்கிருந்து சாவகாசமாகப் பேசலாம்..."
" ஐயோ ராஜநாயஹம்...ஒரே ஒரு வார்த்தைக்காக நீங்கள் ஆபீஸ் போக வேண்டுமா ?"
" ஆபீஸ் என் வீட்டிலிருந்து இரண்டே இரண்டு கிலோ மீட்டர்தான் இருக்கிறது ; ஒரு சிரமமும் இல்லை..."
" ஐயோ ராஜநாயஹம்...ஒரே ஒரு வார்த்தைதான். இந்த ஒரே ஒரு வார்த்தைக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் போக வேண்டுமா ? யோசித்துப் பாருங்கள்... நாம் இவ்வளவு பேசியதற்குள் நீங்கள் சொல்லியிருக்கலாம்..."
அதற்குள் அவர் போனில் சிக்னல் பிரச்சினை. போனை வைத்து விட்டு ' இப்படி ஒரே ஒரு வார்த்தைக்காக இந்த நல்ல மனிதரைப் போட்டு இப்படிப் படுத்த வேண்டுமா என்று நினைத்து விஷாலுக்கு போன் போட்டான் பெருமாள். அவனோ "என் வீட்டுக்கு அக்கா கணவர் வந்திருக்கிறார் ; ஓடிக் கொண்டிருக்கிறேன்" என்றான் பதற்றத்துடன். "அடப் பாவி , நேற்றுதானே அக்கா வந்திருக்கிறார் ; ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாய் ?" என்று கேட்டேன்.
" ஆமாம் ; நேற்று அக்கா , இன்று அக்காவின் கணவர்."
கிட்டத்தட்ட ' ஆத்தீமூக்கா ' காரர்கள் ' அம்மா ' வுக்குப் பயப்படுவது போல் அல்லவா பயந்து சாகிறான் என்று கடுப்புடன் நினைத்துக் கொண்டு , " சரி சரி...ஓடு. அதற்கு முன் இதற்கு அர்த்ததைச் சொல்லி விட்டு ஓடு" என்றான்.
" ஐயோ , நான் இப்போது பைக் அல்லவா ஓட்டிக் கொண்டிருக்கிறேன் ?"
" அடப்பாவி , உனக்கு எத்தனை தடவை சொல்வது , பைக் ஓட்டும் போது போனை எடுக்காதே என்று ?"
" சரி சரி சொல்...நான் பைக்கை ஓரம் கட்டி விட்டேன்."
சொன்னான்.
" அடடா , அற்புதம்...இதற்கெல்லாம் ஒரு குவார்ட்டர் போட்டால்தானே சரியாக இருக்கும் ? ம்ம்ம்....உயிரின் சுடர் என்று போடு" என்று சொல்லி விட்டு அக்கா கணவரைப் பார்க்க ஓடி விட்டான் விஷால்.
இதற்கிடையில் ராஜநாயஹத்தை மீராவின் தொலைபேசியை வைத்துத் தந்திரமாக அமுக்கிய பெருமாள் , " என்ன ராஜநாயஹம்... ஒரே ஒரு வார்த்தைக்கு மூன்று மணி நேரமாக ஒரு அபத்த நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இது தேவையா ?" என்று கேட்டான்.
" ஆமாம் பெருமாள் , நினைத்தால் மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் ஆபீஸ்க்கு போய் பேசுகிறேன் என்று. நீங்கள விடமாட்டேன் என்கிறீர்கள். சரி போனை வையுங்கள். நான் கூப்பிடுகிறேன்”.
“அய்யோ ராஜ நாயகம்... நீங்கள் கூப்பிட்டால் நான் எடுக்கமாட்டேன். அது சரி, இந்த அபத்த நாடகத்தை ஏன் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறீர்கள் ? நிறுத்தி விட வேண்டியதுதானே ? என்னுடைய அழைப்பை ஒரு முறையாவது எடுத்திருக்கலாம் அல்லவா “ என்று கேட்டு விட்டு , கவிதையை முழுமையாகச் சொல்லி கடைசி வரியின் அர்த்தத்தைக் கேட்டான். அதற்குள் மீண்டும் சிக்னல் பிரச்சினை.
ஆனால் ஒரே நிமிடத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
" உயிரின் சுடர்."
***
1.6.2008.
8.40 p.m.

3 comments:

  1. Dear RP
    Pogura pokkil nadappadhai..viruvirupana vasippai matturm thandhiram therindhavar charu.
    Aanal avaradhu serious katturaikal... ??? Quiet opposite its my karuthu

    ReplyDelete
  2. Sir, This story I read from Charuonline litself. That I was thinking who is this rajavinaham. Even I started to read blog only after he mentioned about your site. Anyway Good Blog.

    ReplyDelete
  3. Ashok, I don't think so.

    raja, Thanks

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.